Wednesday, February 25, 2015

தைலான் என்கிற தகைவிலான்:ஒரு தன்னனுபவம் [ காடு மூன்றாம் இதழில் எழுதியது ]

#
ஒரு கிராமத்துச் சிறுவனிடம் கேட்டால் மள மளவென்று பத்துச் செடிகளின் பெயரைச் சொல்வான்.சில பூக்களின் பெயரைச் சொல்வான்.சில பறவைகளின் பெயரைச் சொல்வான்.சூழல்,பசுமை பற்றிய பிரங்ஞை இல்லாமலே அவனுடைய வாழ்வின் புறச் சூழலிலிருந்து இயல்பாகவே இதை அவன் தெரிந்து கொள்கிறான்.அப்படி என்னுடைய சிறு பிராயத்தில் நான் அறிந்து கொண்ட பறவைகளில் ஒன்றுதான் தைலான்.
கணேஸ்-ரமேஸ் என்று பெயரில் ஸ் உள்ளவன் பெருமையாக நினைக்கப் படுகிற அப்போதிருந்த  கிராமத்தில் மற்ற பறவைகளின் பெயர்களைக் காட்டிலும் தைலான் என்கிற பெயர்ச்சொல் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.தவிரவும் எனது பாட்டிகளில் ஒருவருக்குத் தைலான் என்று பட்டப்பெயர் இருந்தது.காரணம் வயதான காலத்திலும் அவர் சுறுசுறுப்பாக இருப்பார்.தைலானும் காலையிலிருந்து மாலைவரை வரிசையாக தெரு முழுதும் பறந்த வண்ணம் இருக்கும்.
தைலான் சாரை சாரையாக ஊருக்குள் பறக்கிறது என்றால் நிலையான மழைக்காலம் அந்த இடத்தில் நிகழ்கிறது என்று பொருள்.ஐப்பசி-கார்த்திகை மாதங்களில் தைலான் குருவிகள் வரவில்லை எனில் மழை பெய்யாது அல்லது நிலை இல்லாத மழைக்காலம் என்று புரிந்து கொள்ளலாம்.எவ்வளவு மாபெரும் கோடை மழை பெய்தாலும் குளம் பெருகினாலும் தைலான் வராது.கார்கால மழையோடு வந்து கார்கால மழையோடு போய்விடும்            

நெல்நாற்று நடும் போது அதன் மேல் பறக்கும்.தை மாதத்தில் நெற்கதிர் விளைந்து நிற்கும்போதும் கதிர்களின் மேலே தைலான்களின் ஆய்ச்சலைப் பார்க்க முடியும்.நெல் நடவு காலத்திலிருந்து நெல் பச்சை நிறத்திலிருந்து மஞ்சள் நிறமாக மாறும் காலம் வரை வயலின் மீது அதிக அளவில் அலைந்து கொண்டிருக்கும்.கதிர் கட்டிய காலத்தில் குறைந்த அளவே பறந்தாலும் உருவம் பெருத்தும் கரு ஊதா நிறம் மங்கியும் இருக்கும்.
நாலாப் பக்கத்திலும் வயல் இரண்டு கிலோமீட்டர் தூரம் என்றால் அந்தப் பச்சை வயல்களின் மேலே 'தைலான் ரயில்'போக வர,வளைந்து திரும்ப -மின் கம்பிகளை மொய்த்துக் கொண்டு நிற்க எனப் பார்த்தாலே சிலிர்க்கும் மெய்.
 அம்பு போல் பறந்து ஆளுக்கு அருகில் வந்ததும் சர்ரென்று விலகி, வீடுகளுக்குள் ஒரு ரவுண்ட் அடித்துத் திரும்பி,ஆட்களின் மேல் குருட்டாம்போக்கில் மோதி ,தட்டான்களூடே சைடு எடுத்து,மாட்டுத் தொழுவுக்குள் -ஆட்டு மந்தைக்குள் புகுந்து,குளத்தின் மீது திரிந்து  கொயகொய என்று ஊரே தைலான் மயப்படும் .கரிச்சான் சிறகில் ஊதா மையை ஊற்றி விட்டது போன்ற தைலான்கள் எங்கிருந்து வருகின்றன?என அப்போது சிந்தித்தது இல்லை."முசல் முட்டையைப் பார்த்தேம்ல"என்று பொய் சொல்கிற பயல் கூட தைலான் முட்டை பார்த்தேன்னு சொல்வதில்லை.எப்படி வருகிறதென்று பயல்களுக்குத் தெரியாது.'வலசை'வந்து செல்கின்றதென இப்போது தெரிகிறது.

தைலான் வேட்டைத் தாகம் பயல்களிடம் கரை புரண்டு ஓடும்.வீட்டுக்குள் நுழைந்து அவைகள் திரும்பும் முன் கதவை அடைத்துப் பிடிக்கும் ராஜதந்திரத்தை நானும் செய்து பார்த்துள்ளேன்.கதவுக்கும் அதன் மேலே நிலைப்படி கல்லுக்கும் இடையே 'ரயில்'சென்றுவிடும்.அந்த வழி இல்லாவிட்டாலும் வேறு இடுக்குகளில் சென்றுவிடும்.வெயிலும் மழையும் நுழைகிற வீட்டினுள் எந்தப் பறவை வந்தாலும் எளிதில் வெளியே தப்பிவிடும்.
துத்திச்செடி,புளியங் குறண்டி ,பருத்தி மார் ,தக்காளி மார் போன்றவற்றால் பட்டாம் பூச்சிகளை அடித்துப் பிடிக்கும் வீர புருசர்கள் தைலானையும் தாக்கிப் பிடிக்க முயல்வதுண்டு.இம் முயற்சியில் ஒன்றிரண்டுதான் மாட்டும்.எருமை மாட்டு வால் முடிகளைப்  பிடுங்கி கண்ணி செய்து பிடிப்பதுதான் பேர் பெற்ற வழி.கண்ணிக்கு காளை -பசு மாட்டு வால் முடிகள் எருமை முடி அளவுக்கு உதவாது.

 எனது ஊரைப் பற்றிக்[நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மலையான்குளம் ]கவிதை எழுதும் போது 'தரைக்கு மேலே ஒரு சாண் உயரத்தில் பறந்து ஈசலை இரை எடுக்கும் தைலான்'என்று எழுதியுள்ளேன்.ஈசல்தான் தைலான்களுக்கு  கண்கண்ட உணவு அப்படியெனில் பிற பூச்சிகளையும் திங்கும் என்று யூகிக்கலாம்.'வலசை'விபரத்தை பறவையியலாளர்கள் சொல்லவேண்டும்.
ஊரில் கண்மாய் கருவை மரங்களுக்கு இடையே மாட்டு வண்டித் தடம் செல்லும்.அதில் மழைக்காலத்தில்  ஈசல் புற்றுத் தோன்றிவிடும்.ஈசல் புற்றுக்குப் பக்கத்தில் கண்ணியை மண்ணில் புதைத்துச் சுருக்கு வெளியில் தெரியும் படி வைத்து விடுவார்கள்.பாதையில் பத்தடிக்கு ஒரு பயல் கண்ணி வைத்திருப்பான் .. தைலான்கள் அலை அலையாக அங்கு வரிசை கட்டும்.எல்லாப் பயல்களும் தூக்குவாளி வைத்திருப்பார்கள்.மாலையில் தூக்குவாளி நிறைய தைலான்கள் பிடித்த பயல்களும் உண்டு .ஈசலை பறந்த வண்ணமே பிடித்துச் செல்லும் தைலான்கள் ,வரிசையாக மீண்டும் மீண்டும் 'ரயில்' விடும் 'தப்பிய ஈசல்களின்  இறகுகள் பாதை எங்கும் உதிர்ந்த புளியமர இலைகள் போல கிடக்கும்.இறகுகள் 'எறும்பு ரயிலுக்கே'...
'தைலான்' பெயர்ச்சொல் கவர்ச்சி பற்றி  உதாரணம் சொல்ல வேண்டும்.'2011 ல் வெளிவந்த வாகை சூட வா'படத்தில் 'தைலத் தைலத் தைலக்கிளி'என்ற சின்னஞ் சிறிய பாடலை எழுதினேன் ..முன்னதாகச் வரிகள் தேர்வாகும் முன் 'சோளச் சோளச் சோளக் கிளி'  என்றும் எழுதினேன் ..இயக்குநர் சற்குணமும் இசையமைப்பாளர் ஜிப்ரானும் சோளக்கிளியை விட  'தைலக் கிளி'என்கிற சொல் புதிதாக இருக்கிறது என்று சொன்னார்கள்.[மெட்டுக்காக கிளி என்று எழுதினேன் .மக்கள் வழக்கில் தைலான் குருவி என்று மட்டுமே வழங்கப்படுகிறது] இவ்வாறாக மனதுக்குள் பறந்த தைலானைப் பாட்டில் பறக்க விட்டேன்..இப்போது இந்தக்  கட்டுரையில் .....

.

வே.ராமசாமி

இந்தியா டுடே ' மதிப்புரை..